மீன் பிடித்தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்தியது முதல் மீனவ சமுதாய மாணவர்களுக்கான திட்டங்கள் வரை மீனவ மக்களுக்கு திமுக அரசு செய்த சாதனைகளை சொல்லி, கனிமொழி எம்பியை ஆதரித்து மேயர் ஜெகன் பெரியசாமி மீனவ பகுதி பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி எம்பிக்கு ஆதரவாக தூத்துக்குடி மாநகருக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தேர்தல் பணிகள் தொடங்கிய நாட்களில் இருந்து வீதி வீதியாக நடந்து சென்று வியாபாரிகள், இளைஞர்கள், மீனவர்கள் என அனைத்து தரப்பு பொதுமக்களிடமும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு மேயர் ஜெகன் பெரியசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக,
தூத்துக்குடி ரோச் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து இனிகோ நகர், பூபால்ராயபுரம் உள்ளிட்ட மீனவர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, மீனவர்கள் நலனுக்காக திமுக அரசு செய்தது என்ன? கனிமொழி எம்பி ஆற்றிய பணிகள் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டார், அதில்,
மீன்பிடி தடைக்காலத்தில் மீனவக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரண உதவித் தொகையை ரூ. 5 ஆயிரத்திலிருந்து ரூ. 8 ஆயிரமாக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.
மானிய விலையில் வழங்கப்படும் டீசல் எண்ணெய் அளவை உயர்த்தி வழங்கவேண்டும் என்று மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, விசைப்படகுகளுக்கு 18 ஆயிரம் லிட்டரிலிருந்து 19 ஆயிரம் லிட்டராகவும், இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளுக்கு 4 ஆயிரம் லிட்டரிலிருந்து 4 ஆயிரத்து 400 லிட்டராகவும் உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை கடந்த ஆகஸ்டு மாதம் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மற்றும் மீனவ சங்கங்கள் இணைந்து நடத்திய மீனவர் நல மாநாடு மற்றும் மீனவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நமது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதை இந்நேரத்தில் உங்களுக்கு அதை நினைவுபடுத்த நான் கடமைபட்டுள்ளேன் என மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
மேலும், மீனவ பகுதி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மேயர் ஜெகன் பெரியசாமி அப்பகுதி மக்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.