கோவில்பட்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் ஆளுயுர மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 2 நாட்களாக கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். வேட்பாளரை ஆதரித்து அவருடன் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், நேற்று கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிச்சேரி, சத்திரப்பட்டி, இடைசேவல், ஊத்துப்பட்டி, மந்தித்தோப்பு கிருஷ்ணாநகர், அத்தை கொண்டான், இனாம் மணியாச்சி, வடக்கு இந்திராநகர், தோணுகால் விலக்கு, ஆலம்பட்டி, படர்ந்தபுளி, முடுக்குமீண்டான்பட்டி, நாலாட்டின்புதூர் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கும், கடம்பூர் ராஜூ எம்எல்ஏ ஆகிய இருவருக்கும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் ஆளுயுர மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.