தூத்துக்குடி தொகுதியில் வேட்புமனு பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் கனிமொழியின் வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி தெரிவித்தார்.
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வேட்பு மனு ஏற்கப்பட்ட பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:- தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் கணவர், மற்றும் அவரது மகன் ஆகியோர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளனர்.
மேலும் அவரது மகன் வங்கி கணக்கில் பான் கார்டு இல்லாமல் 15 லட்ச ரூபாய் உள்ளது. இதுகுறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். மேலும் திமுக வேட்பாளர் மீதான 2 ஜி வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தோம். என்று அவர் கூறினார். பேட்டியின் போது தெற்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பழம், வழக்கறிஞர்கள் பிள்ளை விநாயகம், ஆண்ட்ரூஸ் மணி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.