தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி முதல் தொடங்கியது. 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிந்த நிலையில், 40 தொகுதிகளிலும் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கியது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதனிடையே, திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணி ஆகியோர் தூத்துக்குடியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி இன்று காலை தூத்துக்குடி தருவை மைதானம், முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, என்ன யாருனு நினச்சீக? நான் பன்டார விளை வைத்தியருதான்னு தூத்துக்குடி வட்டார பேச்சு வழக்கில் பேசி, உரிமையோடு அங்கு இருந்த பொதுமக்களிடம் வேட்பாளர் சிவசாமி வேலுமணி வாக்கு சேகரித்த விதம், அங்குள்ளவர்களை வெகுவாக கவர்ந்தது. இதனால், சிரித்த முகத்தோடு, கலகலப்பாக பிரச்சாரம் செய்து மக்களை கவரும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியின் செயல்பாடு அவரின் வெற்றிக்கு கை கொடுக்கும் என்கின்றனர் பொதுமக்கள்.