தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ( மார்ச் 26 ) ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டர்.
தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பணயம் மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதனால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் காணத் தொடங்கிவிட்டது.
இத்தகைய சூழலில் தான், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகளும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தங்கையுமான கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கனி சந்தை, லயன்ஸ் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று அங்குள்ள வியாபாரி மற்றும் பொதுமக்களை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் மாலையில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, இராமநாதபுரம் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த நவாஸ்கனி ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதேபோல, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மாலை தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் நெல்லை தொகுதிக்கு பிரச்சாரம் மேற்கொள்ளவதற்காக எடப்பாடி பழனிசாமி நெல்லை சென்றார்.
தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டாலும், ஆளும் கட்சியை தாண்டி, எதிர்கட்சியான அதிமுக தேர்தல் பரப்புரை கூட்டம் தான் பலரது கவனத்தையும் பெற்றதாக சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரின் மையப்பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை மேற்கொண்டது, அவ்வழியாக சென்ற பொதுமக்களை நின்று கேட்க வைத்ததாகவும், இதனால் அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கூட்டம் பெருமளவில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கடந்த காலங்களில் அதிமுக வேட்பாளர் நட்டர்ஜி கொடுத்த வெற்றியானது அரசியல் அதிர்ச்சியை கொடுத்தது போல், இம்முறை பண்டார விளை வைத்தியர் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி வெற்றி எனும் அரசியல் அதிர்ச்சி வைத்தியம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவற்கில்லை என்று பேசி நகர்த்தனர் தூத்துக்குடி அதிமுக தேர்தல் பரப்புரை கூட்டத்தை கண்ட பலர்.