நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளில், தூத்துக்குடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டு தூத்துக்குடி மாவட்ட காவி சொந்தங்கள் கடும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 19 தொகுதியில் பாஜக நேரடியாக போட்டிகிறது. பாஜக கூட்டணி கட்சியினர் 20 தொகுதியில் போட்டியிடுகின்றனர். இதில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக தூத்துக்குடியும் இடம் பெற்று இருப்பதுதான் பாஜக தொண்டர்களிடையே கடும் அதிர்ப்தியையும். கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து உள்ளூர் காவி சொந்தங்களிடம் விசாரிக்கையில், " கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆகவே அவருக்கு நிகராக ஒரு வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அப்போதைய அதிமுக - பாஜக கூட்டணி, அன்றைய பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை போட்டி வேட்பாளராக நிறுத்தியது. ஆனால், தமிழிசை சுமார் 3 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தற்போது அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக, கடந்த காலங்களை காட்டிலும் கூடுதல் புத்துயிர் பெற்று வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்களின் எண்ணிக்கை, நடுநிலையாளர்களின் ஆதரவு பாஜக பக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவை பாஜக பழைய தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தை தருகிறது. ஆகவே, இம்முறை தூத்துக்குடியில் மீண்டும் கனிமொழி வேட்பாளராக இறங்கும் பட்சத்தில், அவருக்கு கடுமையான போட்டியை கொடுத்து அவரை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளரை தூத்துக்குடி மண்ணில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கடந்த இரண்டு வருடங்களாக தூத்துக்குடியில் பாஜகவினர் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.
இதனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தூத்துக்குடி தொகுதியில் பாஜக வில் சீட் வாங்க சசிகலா புஷ்பா, விவேகம் ரமேஷ், சித்ராங்கதன், தினேஷ் ரோடி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
இந்த சூழலில், தூத்துக்குடி மாநகரில் 10 வார்டுகளுக்கு கூட முழுமையாக வட்ட செயலாளர் இருப்பார்களா? என்ற சந்தேகம் வரக்கூடிய கட்சி, அவர்கள் கட்சி வேட்பாளருக்கு அவர்கள் கட்சி கொடி பிடிக்க ஒரு 10 பேராவது தேறுவார்களா? என்று கேட்க தோன்றும் வகையில் இருக்கக்கூடிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, தூத்துக்குடி தொகுதி பாஜக கூட்டணியில் ஒதுக்கியிருப்பது வேதனையாக உள்ளது என்றும், தேர்தலில் பணியாற்ற ஆர்வமாக இருந்த எங்கள் வேகத்தையே இவை குறைத்து விட்டது என்று ஆதங்கப்படுகின்றனர்.
கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலின் போது, அதிமுக - பாஜக கூட்டணியில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை தமாக விற்கு கூட்டணி தலைமையான அதிமுக ஒதுக்கியது. அதன் விளைவு, 10 ஆயிரம், 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் தோற்ற அதிமுக, 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் நிறுத்தப்பட்ட தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவிடம் படுதோல்வி அடைந்தது. இதனை உணர்ந்த அதிமுக தற்போது, தூத்துக்குடியை கூட்டணிக்கு கொடுக்காமல் தங்களது சொந்த கட்சி வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இப்படியான சூழலில், பாஜக தலைமை ஏன் தூத்துக்குடியை தமாகவிற்கு ஒதுக்கியது என தெரியவில்லை என நொந்து கொள்கின்றனர் உள்ளூர் பாஜக வினர்.
பாஜக போன்ற கட்சிகள் தமாக போன்ற கட்சிகளை தூத்துக்குடிக்கு ஒதுக்கும் போது, நாங்கள் எதிர்கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் டெப்பாசிட் இழக்க செய்வோம் என தூத்துக்குடி திமுகவினர் கூறிவருவது நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதே வேளையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக - அதிமுக இடையே மட்டும் தான் போட்டி இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.