தூத்துக்குடியில் பேருந்து நிறுத்தத்தில் பெண்னை வெட்டிக் கொலை செய்த அவரது கள்ளக்காதலனை போலீசார் தேடி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகேயுள்ள மஞ்சள்நீர்காயல் பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மனைவி கனகா (32). இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கனகாவின் கணவர் ஐகோர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். பின்பு கனகா பழைய காயலில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே கம்பெனியில் வேன் டிரைவராக வேலை பார்த்த பசுவந்தனையைச் சேர்ந்த முனியசாமி (40) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து கனகா தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக அவர் தினமும் மஞ்சள்நீர்காயலில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்து மூலம் வேலைக்கு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை தனியார் பேருந்து மூலம் மஞ்சள்நீர் காயலில் இருந்து, தூத்துக்குடிக்கு வேலைக்கு வந்த கனகா தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையிலுள்ள கல்வியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது மறைந்திருந்த முனியசாமி திடீரென தனது கையில் வைத்திருந்த அரிவாளால் கொடூரமாக கனகாவின் கழுத்தில் வெட்டி விட்டு ஓடி விட்டாராம். இதில் ரோட்டில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகாவை அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே கனகா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய முனியசாமியை தேடி வருகின்றனர். தூத்துக்குடி அருகே உள்ள எப்போதும் என்றான் பேருந்து நிறுத்தம் அருகே சில தினங்களுக்கு முன்பு இதேபோல பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பரபரப்பு குறைவதற்குள், அதேபோல மற்றொரு கொலைச் சம்பவம் நடந்திருப்பது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.