மக்களவைத் தேர்தலுக்கான தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த முறை திமுக சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வென்ற கனிமொழி கருணாநிதியே, இம்முறையும் மீண்டும் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட உள்ளதால், கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்கள் தொடங்கி, திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் தேர்தல் பணிகளை படுதீவிரமாக செய்யத்தொடங்கி விட்டனர்.
இந்த வரிசையில், கனிமொழி எம்பியை மீண்டும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை தாண்டி, அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரையும் டெப்பாசிட் இழக்கச்செய்து, தென்மாவட்டங்களில் தூத்துக்குடி என்பது என்.பெரியசாமியால் கட்டமைக்கப்பட்ட அசைக்க முடியாத திமுக கோட்டை என்பதை நிருபிக்க வேண்டும் என்று, மேயர் ஜெகன் பெரியசாமி மாஸ்டர் பிளான் போட்டு செய்யும் தேர்தல் பணிகள் தான், தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள 60 வார்டுகளில் கிட்ட சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இந்த 60 வார்டுகளில் 53 வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். ஆகவே, தனக்கு கீழ் வரக்கூடிய மாமன்ற உறுப்பினர்களை கொண்டு, தூத்துக்குடி மாநகராட்சி பகுதி வாக்குகளை திமுகவிற்கு சேர்த்திடும் வகையில்,
மாநகர மக்களின் தேவைகளை கேட்டறிந்து உடனுக்குடன் செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமி, தனது கவனத்திற்கு வராமல் ஏதேனும் பொதுமக்கள் குறைகள் இருந்து, அவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, வேட்பாளரிடமும் முறையிடும் அளவிற்கு ஏதேனும் குளறுபடி வந்துவிடாத அளவிற்கு, 53 வார்டுகளை நான்காக பிரித்து, ஒவ்வொரு நாளாக அந்த 53 மாமன்ற உறுப்பினர்கள், அந்த வார்டுகளில் இருக்கக்கூடிய சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து கலந்தாலோசனை நடத்தி, அவர்களின் பகுதி பிரச்சனைகளை கேட்டறிந்து, பட்டியலிட்டு, அதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட தொடங்கி விட்டார்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்பியின் நம்பிக்கைக்கு உரியவர்களின் முக்கியமான மற்றும் முதன்மையானவராக விளங்கி வரக்கூடியவர் மேயர் ஜெகன் பெரியசாமி. அந்த நம்பிக்கையில் சிறிதும் சேதாரம் ஏற்படாத அளவிற்கு, கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியாக வாக்கு வித்தியாசத்தில் கனிமொழியை மீண்டும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி மாஸ்டர் பிளான் போட்டு செய்யும் தேர்தல் பணிகள் தான், தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது அரசியல் வாரிசாக கீதா ஜீவனை அடையாளம் காட்டி விட்டு மறைந்து சென்றாலும், புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்று சொல்லும் அளவிற்கு, தந்தை எட்டு அடி பாய்ந்தால், புள்ள 16 அடி பாய்கிறாரே என்று உள்ளூர் அரசியல் பார்வையாளர்கள் மெச்சுகின்ற அளவிற்கு, மேயர் ஜெகன்பெரியசாமியின் அரசியல் பாய்ச்சலை பார்க்க அண்ணாச்சி பெரியசாமி தற்போது இல்லாதது தான் வருத்தம் என்கிறனர் உடன்பிறப்புகள். தன்னுடைய மக்கள் பணியையும், அரசியல் பணியையும் பார்க்க தற்போது தனது தந்தை இல்லையே என்பதுதான் மேயர் ஜெகன் பெரியசாமியின் எண்ணமாகவும் உள்ளது என்பதை, அவரே பல இடங்களில் நினைவு கூர்ந்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.
தந்தை விட்டு சென்ற பணியை தொடர்வதும், தேர்தலில் கட்சிக்கான வெற்றியை பெற்று கொடுப்பதும் என இவை இரண்டையும் இரு கண்களாக கொண்டு பணியாற்றும் மேயர் ஜெகன் பெரியசாமியின் செயலுக்கான பலன் என்ன என்பது வரும்காலங்களிலேயே தெரியும்.