தேர்தல் வந்தால் தமிழகத்தில் ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளான திமுக, அதிமுக தலைமைகளில் பிற கட்சிகள் கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட காலம் கடந்து, தற்போது பாஜக தலைமையில் கூட்டணியில் இடம் பிடிக்க கட்சிகள் வருகிற காலம் வந்துவிட்டதாகவும், அதுவே தமிழகத்தில் அண்ணாமலை தலைமையிலான பாஜக வளர்ச்சி பெற்றுள்ளதற்கு சான்று என்றும் கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதன் தொடர்ச்சி தான், தன்னுடைய கட்சியையே கலைந்து விட்டு பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்துள்ளார் சரத்குமார்.
1996 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக சரத்குமார் பிரச்சாரம் செய்தார். பின்னர் திமுகவில் ஐக்கியமானார். 1998 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நெல்லையில் களமிறங்கி தோல்வியடைந்தார். 2001 ஆம் ஆண்டு திமுக சார்பில் ராஜ்யசபா எம்பி என்று வளர்ந்து வந்த நிலையில், அக்கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2006 ஆம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்தார். 2006 சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட பிரச்சினைகளால் அதிமுகவில் இருந்து விலகி 2007 ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கினார். 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தென்காசி தொகுதியில் சரத்குமாரும், நாங்குநேரி தொகுதியில் எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர். 2016 ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மையமும் சமத்து மக்கள் கட்சியும் இணைந்து போட்டியிட்டு எல்லா தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்த நிலையில் நேற்று மார்ச் 12ம் தேதி 2024 ல் தனது சமத்துவ மக்கள் கட்சியை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவுடன் இணைத்துக்கொண்டார் சரத்குமார்.
இந்த நிலையில், தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகளில் பாஜக சார்பில் நடிகர் சரத்குமார் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டு வருகின்ற சூழலில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து ஒரு பலமான மற்றும் அவருக்கு கடுமையான போட்டியை கொடுக்கும் விதமாக ஒரு பெண் வேட்பாளரை நிறுத்தினால் நன்றாக இருக்கும் என பாஜக தலைமை விரும்புகிறதாம். அதனால் பாஜக சார்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா சரத்குமாரை களம் இறக்கும் முடிவில் பாஜக இருக்கிறதாம்.
தென் மாவட்டங்களை பொறுத்தவரை நாடார், தேவர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு சமுதாய வாக்குகளே பெரும்பான்மையாக உள்ளது. இவை அனைத்துமே பாஜகவிடம் பக்காவாக இருப்பதால் கனிமொழிக்கு தூத்துக்குடியில் கடுமையான போட்டியை கொடுத்து, அவரை தோல்வியுற செய்யக்கூடிய அளவிற்கு களம் அமையலாம். ஆகவே, அதற்கு தகுந்த வேட்பாளராக ராதிகா சரத்குமார் இருக்கலாம் என்று கருதுகின்றது பாஜக.
பாஜக கூட்டணியில் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ் இடம் பெற்றிருப்பது தேவர் சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாஜக பக்கம் அள்ளிவிட முடியுமாம். கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் கோவில் பட்டி தொகுதியில் மட்டும் 56,153 வாக்குகள் பெற்றுள்ளார். 2019 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எம். புவனேஷ்வரன் 76,866 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார். ஆகவே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அமமுக விற்கு மட்டும் என்றே தனியாக சமார் 1 லட்சம் வாக்குகள் உள்ளன. ஓபிஎஸ் அணிக்கு கணிசமாக 30 முதல் 50 ஆயிரம் வாக்குகள் பெறலாம். அதுபோக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா தேவர் உள்ளிட்ட தேவர் அமைப்பை சார்ந்தவர்கள், "கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தனது சுயலாபத்திற்க்காக மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிதமாக எந்த கணக்கீடும் புள்ளிவிவரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு தாரை வார்த்தார். எனவே அவருக்கு தேவர் சமூகம் ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறிவருவதால்", அந்த வாக்குகளும் பாஜகவின் பக்கமே சேர்ந்துள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வரை தேவர் சமூக வாக்குகள் பாஜக பக்கம் கரை சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தேவேந்திர குலத்தினர் நன்றி உடையவர்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்காக அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் நன்றியின் விசுவாசமாக 80% விழுக்காடு தேவேந்திரகுல மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து வருகின்றனர். எனவே இம்மக்கள் எப்போதும் பாஜகவிற்கு உறுதுணையாக இருப்பர் என்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். ஆகவே அம்மக்களின் வாக்குகளும் கிளியர்.
கோவில் பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பாண்மையாக இருக்கக்கூடிய நாயுடு மற்றும் ரெட்டியார் சமூக மக்கள் கணிசமானோர் பாஜகவில் உள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பாஜக அல்லாத நாயுடு சமூக வாக்குகள் அவருக்கு விழ வாய்ப்புள்ளது. அதே போல் கோவில்பட்டியில் தினேஷ் ரோடியின் களப்பணி, பாஜக வாக்கு வங்கிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
அதே போல், நாடார் சமூகத்திற்கு என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் இருந்தாலும், சரத்குமாரின் ரசிகர் மன்றம் தொடங்கி, சமத்துவ மக்கள் கட்சி வரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நாடார் சமூகத்தை சேர்ந்த ஒரு கூட்டம் இன்னமும் சரத்குமார் பின்னால் இருந்து வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மநீம கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட சமக வேட்பாளர் சுந்தர் 10,534 வாக்குகளை பெற்றார். ஆகவே, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 முதல் 5 ஆயிரம் என சரத்குமாருக்கு என்றே தனியாக வாக்குகள் உள்ளது. அந்த வகையில் 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்து சுமார் 30 ஆயிரம் நாடார் சமூக வாக்குகள் சரத்குமாருக்கு மட்டுமே விழும்.
இவ்வாறு, நாடார், தேவர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு என பெரும்பான்மை சமூக வாக்குகளை கருத்தில் கொண்டும், அவைகளை கனக்கச்சிதமாக அறுவடை செய்திட வேண்டும் என முனைப்போடு இருக்கும் பாஜக, அதற்கு, தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு சரியான வேட்பாளர் ராதிகா சரத்குமார் என்று முடிவெடுத்துள்ளதாகவும், தேர்தல் சமயத்தில் தூத்துக்குடியில் தங்கி தேர்தல் பணியாற்றுவதற்கு ராதிகா சரத்குமாருக்கு வீடும் பார்க்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமலா போகும் தேர்தல் களமும் காலமும்!