மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 75 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் பேரிடர் நிவாரணம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் கனமழையின் காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஏழை, எளிய மக்களின் வீடுகள் நீரில் இடிந்து முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக இயக்க தலைவர் சக்தி. திருமதி. இலட்சுமி பங்காரு அடிகளார் அவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட தலைவர் சக்தி முருகன் மூலம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், மேல்மருவத்தூரில் நடைபெற்ற ஆன்மிக குரு பங்காரு அம்மா அவர்களின் 84 வது அவதார பெருமங்கல விழாவில் சுமார் 3.5 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில், தூத்துக்குடி வெள்ளப் பாதிப்புகளில் வீடு இடிந்தது மற்றும் தொழில் உபகரணங்கள் சேதமடைந்த 75 பேருக்கு பேரிடர் நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி கனி ஹோட்டல் கூட்டரங்கில் பேரிடர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன், செயலாளர் செந்தில் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் தலைமை தாங்கி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பெரும்படை சாஸ்தா கோவில் கிராமம், ஆத்தூர், வேப்பலோடை, திருவிக நகர், தெர்மல்நகர், முத்தையாபுரம், மாப்பிளையூரணி, ஆரோக்கியபுரம், சிலுவைப்பட்டி, ஜெ.ஜெ.நகர், தேவர் காலனி, விஸ்வபுரம், குறிஞ்சி நகர், அண்ணாநகர், லெவிஞ்சிபுரம், பைபாஸ் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 75 பயனாளிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியாக ரூ.20 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் அணி செயலாளர் செல்லத்துரை, பேரிடர் தொண்டு பொறுப்பாளர்கள் தமிழரசன், தனபால், சித்த மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், ஆனந்த், தியாகு, ஊர் வன அறக்கட்டளை தலைவர் ரமேஷ், வட்டத் தலைவர்கள் செல்வம், வண்டி மலையான், திருவிக நகர் சக்தி பீடம் திருஞானம், பொருளாளர் அனிதா, அழகேசபுரம் மன்ற தலைவி தங்கம், குளத்தூர் செல்வம், புதிய துறைமுகம் கண்ணகி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவ்வாடைத் தொண்டர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.