தூத்துக்குடி மாவட்டத்தில் புதிரை வண்ணார் சமுதாய மக்கள் குறித்து கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பாக, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் துாத்துக்குடி மாவட்டத்தில் புதிரைவண்ணார் சமூக மக்களின் பொருளாதார நிலையை கண்டறிவதற்காக, கணக்கெடுப்பு பணி இப்சோஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிறுவனம், துறை அதிகாரிகள், புதிரைவண்ணார் நலவாரிய உறுப்பினர்கள், உள்ளுர் சமூகத்தினர் மற்றும் அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
இந்த கணக்கெடுப்புக்குழு ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் நேரடியாக சென்று கணக்கெடுப்பை நடத்தி, அவர்களிடம் நேரடியாக தகவல்களை பெற்று ஆய்வு செய்யப்படும். எனவே, இந்த கணக்கெடுப்புப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வரும் போது, புதிரைவண்ணார் இன மக்கள் உரிய தகவல்களை அளித்து, கணக்கெடுப்பு குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.