போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எட்டையபுரத்தில் நாளை ( மார்ச் 12 ) அதிமுக சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து எட்டையபுரம் நகர செயலாளர் ராஜ குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் விடியா தி.மு.க அரசு பதவியேற்ற மூன்றாண்டுகளில் தமிழகம் போதைப்பொருட்களின் கூடாரமாக மாறி இளைஞர்களின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும், போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடமும், இளைஞர்களிடமும் ஏற்படுத்தும் வகையிலும் தமிழகம் முழுவதும் மனித சங்கிலிப் போராட்டம் நடத்திட எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரின் ஆணைக்கு இனங்க,
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், எட்டையபுரம் அதிமுக சார்பில் நாளை 12.03.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு எட்டையபுரம் பேருந்து நிலையம் முன்பு, வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில், விளாத்திகுளம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. இதில், அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர். மனித சங்கிலி போராட்டத்திற்கான ஏற்பாடுகளை எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார் செய்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.