தூத்துக்குடி எம்பி தொகுதியில் திமுக வேட்பாளராக மீண்டும் கனிமொழியே போட்டியிடக்கூடும் என்ற நிலையில், அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக திமுகவின் பாரம்பரிய குடும்பத்தின் மருமகள் ஒருவர் வேட்பாளராக களம் இறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில், எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகளின் சார்பாக யாரெல்லாம் வேட்பாளர்களாக போட்டியிடப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், தூத்துக்குடி மக்களவை தொகுதியில், திமுக சார்பில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கனிமொழி எம்.பி திமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்துள்ளார். ஆகவே, தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் கனிமொழியே போட்டியிடக்கூடும் என்ற தகவல் உறுதியான நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட பலமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் என அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பாஜக கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது. அதிமுக சார்பில் உள்ளூர் பிரமுகரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற போர்குரல் கட்சியினரிடையே ஒரு புறம் எழுந்தாலும், கனிமொழிக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தக்கூடிய வேட்பாளரே வேண்டும் என எடப்பாடியார் உறுதியாக இருப்பதால், சுதாகர், சிவசாமி வேலுமணி ஆகியோர் வரிசையில் தற்போது புதிதாக ஒரு பெண் ஒருவரும் வந்துள்ளதாக அதிமுக தலைமை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
யார் அந்த பெண் வேட்பாளர் என்ற கேள்விக்கு விடை தேடும் போது தான், அனைவருக்கும் ஆச்சியரியமாக இருந்ததாம். ஆம் அவர்தான், எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த, மறைந்த முன்னாள் அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலராக இருந்தவருமான எஸ்.பி. சற்குணத்தின் மருமகள் சிம்லா முத்து சோழன். நேற்று தான் கட்சியில் சேர்ந்தார் அதற்குள் வேட்பாளரா? என்று திகைக்கும் அளவிற்கு சிம்லா முத்து சோழன் வேட்பாளர் வரிசையில் வரக் காரணம் என்ன? யார் இந்த சிம்லா முத்து சோழன்? இவரை ஏன் கனிமொழிக்கு எதிராக நிறுத்த எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார்? என்ற கேள்விகளுக்கு பதிலாக இதைத்தான் பலரும் தருகிறார்கள். அவைகள் பின்வருமாறு
திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த சிம்லா முத்துசோழன் ஒரு காலத்தில் ஜெயலலிதாவையே கவனிக்க வைத்தவர்.
திமுகவின் துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சற்குண் பாண்டியனின் இரண்டாவது மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன் (35). இவர் கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூரை பூர்வீகமாகக் கொண்டவர். பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான்.
இவரது இயற்பெயர் ஆண்டனி சிம்லா ஷினி. ஆர்சி கிறிஸ்துவ பிரிவைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா புனித அந்தோணியார் என்ற படத்தை தயாரித்தவர். இதன் மூலம் போப் ஆண்டவரிடம் ஆசி பெற்றவர். முதல்வர் ஜெயலலிதா படித்த அதே சர்ச்பார்க் கான்வென்டில் சிம்லா படித்தார். தற்போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். அவரது கணவர் முத்துச்சோழனும் வழக்கறிஞர்.
முதலில் வடசென்னை மாவட்ட பெண் வழக்கறிஞர் அணி செயலாளராகவும், அதன் பின் மாநில மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளராக பொறுப்பு வகித்திருந்தார். அப்போது 2016 ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து சிம்லா களமிறக்கப்பட்டார்.
அந்த தேர்தலில் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா வென்றார். பொதுவாக ஜெயலலிதா போட்டியிடும் தொகுதிகளில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெல்வது வழக்கமாக இருந்தது. ஆனால் சிம்லா முத்துச்சோழன் களப்பணியாற்றியதால் அவர் 30 ஆயிரம் வாக்குகளில் மட்டுமே வென்றார்.
ஜெ மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 வட சென்னை மக்களவைத் தொகுதி உள்ளிடவைகளில் வேட்பாளராக போட்டியிட விரும்பிய அவருக்கு திமுக தலைமை மறுப்பு என சிம்லா முத்துச்சோழனுக்கு அடுத்தடுத்த நாட்களில் திமுகவில் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இவர் கனிமொழியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டதாலும் திமுகவில் ஓரம் கட்டப்பட்டதிற்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் தொடர்ந்து அதிர்ப்தியில் சிம்லா முத்துச்சோழன் நேற்று எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவிற்கு எதிராக போட்டியிட்டு, ஜெயலலிதாவையே கவனிக்க வைத்தவர். அதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தவர். முள்ளை முள்ளால் எடுப்பது போல், ஒரு காலத்தில் கனிமொழியின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவரையே, கனிமொழியை எதிர்த்து போட்டியிடச் செய்தால் களம் எப்படி இருக்கும் என்று எண்ணுவதாலும், திமுகவின் பக்கபலமான சிறுபாண்மை ஓட்டுகளையும் அறுவடை செய்வதிலும், களப் பணி ஆற்றுவதிலும் ஆற்றல் கொண்டவராக வழக்கறிஞர் சிம்லா முத்துச்சோழன் விளங்குவார் என்று எடப்பாடி பழனிச்சாமி கருதுவதால், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் களம் இறக்கப்படும் வேட்பாளர்களின் வரிசையில் முக்கியத்துவம் வாய்ந்தவாராக இடம் பிடித்துள்ளார் சிம்லா முத்துச்சோழன் என்கின்றனர் உட்கட்சி விவகாரம் அறிந்த விபரமானவர்கள்.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவில் உள்ள மணத்தி என்ற கிராமத்தில் வசித்து வரும் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகைப்பொருட்கள், சமையல்எண்ணெய், போர்வை, குழந்தைகள், பெண்கள், பெரியவர்களுக்கு ஆடைகள் போன்றவற்றை மணிமேகலை அமிட்டி சோசியல் சர்வீஸ் மூலம் அதன் நிறுவனத் தலைவராக சிம்லா முத்துசோழன் நிவாரண உதவிகளையும் செய்தார் என்பது குறிப்பிட தக்கது.