• vilasalnews@gmail.com

தூத்துக்குடி எம்பி தொகுதி வேட்பாளர்... அதிர்ச்சியில் அதிமுகவினர்!

  • Share on

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி கடந்த 2008-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.  இதில், விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில், எஸ்.ஆர். ஜெயதுரையும், அதிமுக சார்பில் பேரவை முன்னாள் தலைவர் பி.எச். பாண்டியனின் மனைவி சிந்தியா பாண்டியனும் போட்டியிட்டனர். இதில், எஸ்.ஆர். ஜெயதுரை 87 ஆயிரத்து 652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினர் என்ற பெருமைக்குரியவரானார்.

தொடர்ந்து, 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெ. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, திமுக வேட்பாளர் ஜெகனை விட ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 2 வாக்குகள் அதிகம் பெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

திமுக மற்றும் அதிமுக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ள நிலையில், 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட கனிமொழி, 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இவர் இந்த தேர்தலில் 5,63,143 வாக்குகளை பெற்றார்.  பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன் 2,15,934 வாக்குகள் பெற்றார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர்  எம். புவனேஷ்வரன் 76,866 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியானது உதயமானதில் இருந்து திமுக, அதன் பின் அதிமுக, அடுத்து திமுக என்ற ரீதியில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை அதிமுக வெற்றி பெற வேண்டும் அப்பொழுது தான் கணக்கு சரியாக வரும் என அதிமுகவினர் ஒரு புறம் கணக்கு போட்டு இருக்க, அவர்களின் கணக்கில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக வேட்பாளர் தேர்வு இருப்பதாக உள்ளூர் ரத்தத்தின் ரத்தங்கள் கவலை முகம் காட்ட தொடங்கி விட்டனர்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது, தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியை களம் இறக்க, அவருக்கு இணையாக ஒரு விஐபி வேட்பாளர் மற்றும் தொகுதியின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கருதி அதிமுக - பாஜக கூட்டணி சார்பில் அன்றைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் களம் இறக்கப்பட்டார். ஆனால், அனைத்து ராஜதந்திரங்களும் வீணாய் போனதோ என்று சொல்லும் அளவிற்கு 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார் தமிழிசை. 

அதோடு நிற்காமல், 2021 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாநகரில் 10 வார்டுகளிலாவது முழுமையாக வட்டச்செயலாளர்கள் இருப்பார்களா? என்று கேட்கும் வகையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி தொகுதியை தாரை வார்த்து கொடுத்து மீண்டும் படுதோல்வியை சந்தித்தது அதிமுக.

இந்த இரண்டிலும் பாடம் கற்றும் திருந்தாத அதிமுக, ஹாட்ரிக் படுதோல்வியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையோ வந்துவிட்டதோ என்னவோ, அதற்கு ஏற்றார் போல், தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு வெளியூரில் இருந்து வேட்பாளரை இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச தொடங்கி விட்டனர்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கு நம்ம தரப்பில் ஆள் இல்லை. எனவே நீங்களே உங்கள் தரப்பில் தயார் படுத்தி கொள்ளுங்கள் அண்ணே என, அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் சண்முக நாதனிடம் சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்ள, சண்முக நாதனின் ஒரே தேர்வாக சுதாகரை அழைத்துக்கொண்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அழைத்து செல்ல, தேர்தல் செலவு, வேட்பாளரின் செல்வாக்கு உள்ளிட்ட விபரங்களை நேரடியாகவே கேட்டறிந்து, சுதாகரையும் டிக் செய்து விட்டாராம் எடப்பாடியார்.

இந்த நிலையில் தான், தென் சென்னை வட மேற்கு மாவட்டம் தி.நகர் வடக்கு பகுதி செயலாளரான, வட பழனி புத்தூர் கட்டு மருத்துவர் ஆர்.சிவசாமி வேலுமணி என்பவர், தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் போட்டியில் குதித்துள்ளார். மேலும், இவர் தான் அதிமுக சார்பாக இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் என தகவல் பரவ, சோர்வின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்களாம் உள்ளூர் ர.ர க்கள்.

உள்ளூர் அதிமுகவினர் சோர்விற்கான காரணம் என்ன என்று விசாரிக்கையில், "தூத்துக்குடியில் திமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர், முதல்வரின் சகோதரி, சிட்டிங் எம்பி என்ற வகைகளில்  பலமான வேட்பாளராக கனிமொழி அறியப்பெற்றாலும், அவரை மண்ணை கவ்வச்செய்து மீண்டும் சென்னைக்கே அனுப்பும் சக்தி அதிமுக தொண்டர்களுக்கு உண்டு. அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகளை பொறுத்தவரை சோர்வின்றி களத்தில் தேர்தல் பணியாற்றும் வகையில் அவர்கள் விரும்பும் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். அம்மா இருந்த காலத்தில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் கதை வேறு, தற்போதைய நிலைமை வேறு. அதனை புரிந்து கொண்டு கட்சி தலைமையும், மாவட்ட செயலாளர்களும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தமிழிசை, எஸ்டிஆர் விஜயசீலன் என கூட்டணி கட்சிகளுக்கு தேர்தல் வேலை பார்த்து அலுத்துப்போன கட்சிக்காரனுக்கு, மீண்டும் இறக்குமதி வேட்பாளருக்கு வேலை செய்ய சொன்னால், எப்படி அவன் உற்சாகத்தோடு தேர்தல் வேலை செய்வான்? என்று ஆதங்கத்தை அனல் பறக்க கொட்டி தீர்க்கின்றனர் உள்ளூர் ர.ர.,க்கள்".

வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு மாவட்ட செயலாளர்களிடம் மிகவும் நெருக்கமாகவும், இணக்கமாகவும் இருக்கக்கூடியவர். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவராலும் ஒரே முகமாகவும், பாரபட்சமின்றியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகுதி கொண்டவர். தொகுதியின் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர். தேர்தல் செலவுகளை தாக்குபிடிக்க கூடியவர். இவ்வாறு அனைத்து விதத்திலும் தகுதியாகவும், முதன்மையாகவும் விளங்கக்கூடிய உள்ளூர்வாசி என்றால் அவர் முன்னாள் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர் மட்டுமே என்கின்றனர் அதிமுக உட்கட்சி விவகாரம் தெரிந்த விபரம் அறிந்தவர்கள். 

சுதாகர் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்படும் பட்சத்தில், கோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரனை தோற்கடித்து, எப்படியொரு தேர்தல் அரசியல் வரலாற்று நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட அதிமுக செய்ததோ, அதே போல், ஆளும் கட்சியின் வேட்பாளரும், தமிழக முதல்வரின் சகோதரியும், சிட்டிங் எம்பியுமான கனிமொழியை அதிமுகவின் புதுமுக வேட்பாளர் தோற்கடித்து விட்டார் என்ற மீண்டும் ஒரு  தேர்தல் அரசியல் வரலாற்று நிகழ்வை தூத்துக்குடி மாவட்ட அதிமுக செய்து காட்டும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் தூத்துக்குடி அதிமுகவினர்.

தேர்தல் காலத்தில் அனைத்து கட்சிகளுக்கு இடையே மட்டும் களம் சூடுபிடிப்பதில்லை. அவரவர் சொந்த கட்சிக்குள்ளேயும் வேட்பாளர் குறித்த எதிர்பார்ப்பிலும் சூடுபிடிக்கத்தானே செய்யும்.

  • Share on

தூத்துக்குடி சிவன் கோவில் மகா சிவராத்திரி விழா : மார்ச் 8ம் தேதி தொடங்கி விடிய விடிய நடைபெறும்!

தூத்துக்குடியில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்த பொதுமக்கள்!!

  • Share on