தூத்துக்குடியின் பிரபல தொழிலதிபரும் டிரான்ஸ்போர்ட் உரிமையாளருமான ஜெயராஜ் என்பவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி 4 வது ரயில்வே கேட் அருகே, போல்பேட்டை மேற்கு பகுதியில் குடியிருந்து வருபவர் ஹரிபாலகிருஷ்ணா டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் சொக்கன் என்பவரது மகன் ஜெயராஜ். இவர் திருநெல்வேலியில் தனது பேரனுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, கடந்த மார்ச் 1ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுள்ளார். இதையறிந்த கொள்ளையர்கள் நேற்று வீட்டிற்குள் ஏறி குதித்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், இன்று ( 3.3.24 ) மாலை திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும், பூஜை அறையில் இருந்த விலையுயர்ந்த பொருள்கள், செல்போன், பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆராய்ந்து வருகின்றனர்.
மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆராய்ந்தபோது மூன்று பேர் கொண்ட கொள்ளையர்கள் கொள்ளை அடித்து விட்டு சென்றது தெரியவந்துள்ளது. கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து போலீசார் தப்பிச்சென்ற 3 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியில் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.