தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி மணல், கல் கடத்திய லாரியை தடுத்து நிறுத்திய கோட்டாட்சியர் பிரபு, லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபு, இன்று மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு, காலை நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலை சுமார் 7.45 மணியளவில், மங்களகிரி விலக்கு அருகே TN 75 AW 5573 என்ற டிப்பர் லாரியில் உரிய அனுமதி இன்றி 19.850 டன் அளவு வெளிர் நிற எம்சான்ட் மணல் கடத்தி வரப்பட்டதை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, புதுக்கோட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு அதன் உரிமையாளரான கீழே தட்டப்பாறையைச் சேர்ந்த தாவீது மகன் இம்மானுவேல், லாரி டிரைவர் தெய்வ செயல்புரம் வடக்கு தெரு ராமசாமி மகன் முருகன் ஆகியோர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், கீழ தட்டப்பாறை ஜோதி நகர் சந்திப்பு அருகே சுமார் காலை 10.30 மணி அளவில் சோதனை செய்தபோது TN 69 BT 7623 என்ற எண் கொண்ட மினி லாரியில் எந்தவித அனுமதியும் இன்றி சுமார் இரண்டு யூனிட் அளவு குண்டு கல் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர் புதுக்கோட்டை கணபதி நகரச் சேர்ந்த சுடலைமுத்து மகன் வேலாயுதம், ஓட்டுநர் திம்மராஜபுரம் மனோகரன் மகன் சத்தியநேசன் ஆகியோர் மீது தட்டப்பாறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.