தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படனர்.
கடந்த 30.01.2024 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோரம்பள்ளம் ஜங்ஷன் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலின் முன்பு வைத்து ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பு பகுதியை சேர்ந்த குணா (எ) பொன்தங்கம் என்பவரது மனைவி அமராவதி (23) என்பவரை குடும்ப பிரச்சனை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் மேற்படி அமராவதியின் கணவரான முத்துராஜ் மகன் குணா (எ) பொன்தங்கம் (23), அதே பகுதியை சேர்ந்தவர்களான இவரது சகோதரரான முருகன் (எ) மருது (22) மற்றும் உறவினரான முனியன் மகன் வள்ளி (23) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் குணா (எ) பொன்தங்கம், முருகன் (எ) மருது மற்றும் வள்ளி ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய அப்போதைய காவல் ஆய்வாளர் ராமலெட்சுமியும்,
கடந்த 20.02.2024 அன்று விளாத்திகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விளாத்திகுளம் to வேம்பார் ரோடு பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு வைத்து ஒருவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்க முயன்று கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் ஹைகோர்ட் மகாராஜா (30) என்பவரை விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் ஹைகோர்ட் மகாராஜா மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேச பெருமாளும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஸ்ரீவைகுண்டம் பிச்சனார் தோப்பு பகுதியை சேர்ந்தவர்களான 1) குணா (எ) பொன்தங்கம், இவரது சகோதரரான 2) முருகன் (எ) மருது, உறவினரான முனியன் மகன் 3) வள்ளி மற்றும் தூத்துக்குடி சுந்தரவேல்புரம் பகுதியை சேர்ந்த சின்னதுரை மகன் 4) ஹைகோர்ட் மகாராஜா ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேச பெருமாள் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலைய தற்போதைய காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி ஆகியோர் மேற்படி 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.