தனது சார்பாக வெளியான விளம்பரத்தில் சீன ராக்கெட் சர்ச்சை விவகாரம் தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பம் மற்றும் மீன்வளப் பொறியியல் துறை மற்றும் தூத்துக்குடி மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையம் ஆகியவை இணைந்து மீன்பிடிப் படகு என்ஜின் பராமரிப்பு மற்றும் கடலில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மீனவர்களுக்கான ஒருவார கால இலவச பயிற்சி துவக்க விழா இன்று காலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் நடந்தது.
இவ்விழாவில், அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பயிற்சியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் திமுக விளம்பரத்தில் சீன தேசிய கொடி இடம்பெற்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், "இந்த விவகாரத்தில் சிறிய தவறு நடந்துவிட்டது. நான் இந்தியன்தான். இந்தியா மீது பற்றுள்ளவன்தான் என்றார். மேலும்,"வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிதான் வெற்றிபெறும். தமிழகத்தைச் சேர்ந்தவரே பிரதமராக வருவார் என்றார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரத்தில், பிரதமர் மோடி மற்றும் முதல்வர் ஸ்டாலினின் பின்னணியில் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்ட ராக்கெட் படம் இடம்பெற்றுள்ளது. இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்டுகளே நம் தேசம் ஏவும் நிலையில், சீன ராக்கெட்களின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் தற்போது விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.