தூத்துக்குடியில் வழிமறித்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற இளஞ்சிறார் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி சிலுவைப்பட்டி ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மைக்கேல் மகன் அந்தோணி ரிச்சன் (21) என்பவர் கடந்த 25.02.2024 அன்று இரவு வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி குமரன் நகர் சாலையில் இருச்சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது, அந்த பகுதியில் இருந்த மர்ம நபர்கள் மேற்படி அந்தோணி ரிச்சனை வழிமறித்து தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் அவரிடமிருந்த செல்போனில் ஜிபேயிலிருந்து ரூபாய் 74,500 பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து மேற்படி அந்தோணி ரிச்சன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில், வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த மதியழகன் மகன் முத்துசெல்வம் (23), தூத்துக்குடி 3சென்ட் அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மதியழகன் மகன் மகாராஜா (23), ஸ்டாலின் மகன் சஞ்சய் (20) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவர் ஆகிய 4 பேர் சேர்ந்து மேற்படி அந்தோணி ரிச்சனை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் முத்துச்செல்வம், மகாராஜா, சஞ்சய் ஆகியோரை கைது செய்தும், மேற்படி இளஞ்சிறாரை கையகப்படுத்தி திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர். மேலும் ரூபாய் 12,000 மதிப்புள்ள செல்போன் மற்றும் ரூபாய் 74,500 பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.