ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழாவுக்கு வந்த பெண்ணிடம் 3 பவுன் நகையை பறித்த தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் கோவிலுக்கு வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
இந்த விழாவில், பட்டம் பகுதியை சேர்ந்த சியாமளா(வயது70) என்பவரும் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டார். அன்று மாலையில் பொங்கல் நிவேத்தியம் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பிய சியாமளா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி வஞ்சியூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் ராஜேஷ்குமார் தலைமையில் தனிப்படையினர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பெண்களை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் 3 பவுன் நகை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த மீனாட்சி (34), மாரி (33) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் 2 பேரும் விழா காலங்களில் ஊர் ஊராக சென்று பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் நகைப்பறிப்பில் ஈடுபட்டு கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அட்டகுளங்கரை பெண்கள் சிறையில் அடைத்தனர்.