தூத்துக்குடி மாவட்டம் குலசையில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி வரும் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் பங்கேற்க உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக, இங்கு தான் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தசரா திருவிழாவுக்கு பெயர் போன குலசேகரப்பட்டினத்தில்தான் இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளம் அமைய போகிறது.
பூகோள ரீதியாகவும் ராக்கெட் ஏவுவதற்கு உகந்த இடமாக குலசை இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் பகுதி காற்றின் வேகம் அதிகம் இல்லாத இடமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும் இருக்க வேண்டும். புயல், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படாத பகுதியாகவும் இருக்க வேண்டும்.
அந்த வகையில், நிலையான கால நிலை கொண்ட குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. குலசேகரன்பட்டினம் நிலநடுக்கோட்டில் இருந்து 8.364 டிகிரி வடக்கே உள்ளதால், இந்த பகுதியில் இருந்து 90 டிகிரி தெற்கு நோக்கி ராக்கெட்டுகளை ஏவ முடியும். இதனால் எரிபொருள் செலவும் மிச்சமாகும். தற்போது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மாதவன் குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வரும் 28 ஆம் தேதி பிரதமர் மோடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா, தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். கேலா இந்தியா துவக்க விழாவில் பிரதமர் மோடியும் முதல்வர் முக ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்ற நிலையில், ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவிலும் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடலோர பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.