தூத்துக்குடியில் சரக்கு வேனில் கடத்தப்பட்ட 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு காவல் உதவி ஆய்வாளார் கார்த்திகேயன், சிறப்பு உதவி ஆய்வாளார் முத்துராஜன், ஏட்டு பூலையா நாகராஜன் ஆகியோர் தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை அரசடி விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர். அதில் 50 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, போலீசார் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, ரேஷன் அரிசி கடத்தியதாக வேனில் இருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேரந்த தளவாய்மாடசாமி (வயது 44), டிரைவர் பண்டாரம்பட்டியை சேர்ந்த ரவிக்குமார் (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தருவைகுளம், பட்டினமருதூர், ஏ.எம்.பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் வீடுகளில் பயன்படுத்தியது போக மீதி உள்ள சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை மருத்துவ கல்லூரியில் கட்டிட வேலை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கும், பன்றி பண்ணைகளுக்கும், மாட்டு தீவனத்துக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை போலீசார் சரக்கு வாகனம், ரேஷன் அரிசி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.