ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது தமிழக அரசு.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆஜரான வேதாந்தா நிறுவன மூத்த வழக்குரைஞர் சித்தார்த் தவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டு சீல் வைத்த விவகாரத்துக்கு எதிரான மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என முறையிட்டார். அப்போது தலைமை நீதிபதி இந்த மனு தொடர்பாக இறுதி விசாரணைக்கு எத்தனை நாட்கள் தேவைப்படும் என கேட்டதற்கு, ஏற்கனவே 2 நாட்கள் என இறுதி விசாரணைக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு முன், மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் மீண்டும் கடந்த ஜனவரி 2-ம் தேதி முறையிடப்பட்டது. இதை பதிவு செய்த தலைமை நீதிபதி, பதிவாளரிடம் ஆலோசித்துவிட்டு உரிய தேதியை அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இறுதி விசாரணை நடைபெற்றது.
அப்போது, வேதாந்தா நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். தூத்துக்குடி சிப்காட் பரப்பளவு 1,800 ஏக்கர் என்றும், அதில் 1000 ஏக்கர் பரப்பளவில் ஸ்டெர்லைட் நிறுவனம் இயங்கி வருவதாகவும், சிப்காட்டில் 67 நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், அவற்றில் 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ரெட் கேட்டகிரியில் உள்ள மற்ற நிறுவனங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலை மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வேதாந்தா தரப்பு வாதம் வைத்துள்ளது.
மேலும், 2018ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு லைசென்ஸ் புதுப்பிக்க விண்ணப்பித்தபோது அது கிடப்பில் போடப்பட்டதாகவும், ஸ்டெர்லைட் ஆலை செயல்படக்கூடாது என தமிழக அரசு தெரிவித்ததாகவும், வேதாந்தா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
2018ஆம் ஆண்டின்போது, இந்தியாவின் மொத்த தாமிர உற்பத்தியில் 36 சதவீதம் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் உற்பத்தி செய்ததாகவும், நாளொன்றுக்கு 1700 டன் தாமிரத்தை உற்பத்தி செய்யும் திறனுடன் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது என்றும், தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் வேதாந்தா தரப்பு வாதங்களை வைத்துள்ளது.