ஏரல் மேலஉடையார்குளத்தில் ரைஸ் மில்லில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 5 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டுக்கள் காசி விசுவநாதன், பூலையா நாகராஜன், போலீஸ்காரர் லோகேசுவரன் ஆகியோர் ஏரல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏரல் மேல உடையார்குளத்தில் உள்ள ஒரு ரைஸ் மில்லில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு தலா 50 கிலோ எடை கொண்ட 15 மூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசியும், தலா 50 கிலோ எடை கொண்ட 100 மூட்டைகளில் ரேஷன் அரிசியை அரைத்த குருணையும் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் 5 ஆயிரத்து 750 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.