தூத்துக்குடியில் ஷிப்பிங் கம்பெனி ஊழியர் வீட்டில் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மில்லர் புரம் பகுதியைச் சேர்ந்தவர் நல்ல பெருமாள் மகன் சின்ன கண்ணன் (60), ஷிப்பிங் கம்பெனியில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 6ஆம் தேதி தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று சென்னையில் தங்கியிருந்து நேற்று உறவினர் வீட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர், இன்று காலை சுமார் 6.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று பீரோ மற்றும் கபோர்டுகளில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தனிவிரல்ரேகை பிரிவினர் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.