நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக இருந்து வந்த பில்லா ஜெகனை நீக்கி தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தலைவரை புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ள நிலையில், திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருந்த பில்லா ஜெகன் மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி சின்ன கடைத்தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் ஆரம்பத்துல திமுகவின் இளைஞரணியில் இருந்து வந்தநிலையில், மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருச்செந்தூர் தொகுதியின் எம்எல்ஏ-வும், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக மாறி இருந்து வருகிறார்.
பில்லா ஜெகனின் மகளை ஒருதலைப்பட்சமாக காதலித்த இளைஞரை நிர்வாணமாக்கி, ஆண் குறியைத் துண்டித்து கொலை செய்த வழக்கு, சொத்துப் பிரச்னையில் தன் உடன் பிறந்த தம்பியை துப்பாக்கியால் சூட்டுக் கொலை செய்த வழக்கு என கொலை, கொலை முயற்சி வழக்குகள் இவர்மீது இருக்கின்றன. இதனால், கடந்த 2019 ஏப்ரலில் அவரை கட்சியிலிருந்து நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்தது.
பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனின் முயற்சியால் தெற்கு மாவட்ட திமுக-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வேலை செய்து வந்தார். அப்போது, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரான கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பில்லா ஜெகன் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சுபாஷ் பண்ணையார், பில்லா ஜெகனை போனில் அழைத்து எச்சரித்தார். இதனிடையே இருவருமே ஒருவருக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், சுபாஷ் பண்ணையாரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி யிடம் மனு அளித்தார் பில்லா ஜெகன். அதன் பின் அனிதா ராதாகிருஷ்ணனின் பரிந்துரையால் பில்லா ஜெகனுக்கு துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது.
பின்னர், கடந்த ஒரிரு ஆண்டுகளுக்கு முன்பு பில்லா ஜெகன், தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், ஒரு நபர் ஆணையத்தில் பணியாற்றியவரைத் தாக்கிய சம்பவத்தில் பில்லா ஜெகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பில்லா ஜெகனுக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. அத்துடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் எந்தவொரு திமுக நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாமல் இருந்து வந்தார் பில்லா ஜெகன்.
இந்த நிலையில் தான், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி உள்ள விஜய் தினமும் ரசிகர்களை சந்திக்கும் வீடியோக்களை வெளியிட்டு தனது ரசிகர்களின் எழுச்சியை காண்பித்து வருகிறார்.
விஜய் கட்சி ஆரம்பித்த மறுநாள், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்தூரில் நடத்திய சத்ரு சம்ஹார யாகத்திலும் பில்லா ஜெகன் கலந்து கொண்டதாக படங்கள் வெளியானது.
தூத்துக்குடியில் கனிமொழி தலைமையிலான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் பில்லா ஜெகன் பங்கேற்றார்.
ஒரே நேரத்தில் திமுக, தமிழக வெற்றி கழகம் என இரு அரசியல் இயக்கங்களிலும் பில்லா ஜெகன் முக்கியப் பொறுப்பு வகித்து வந்தது பெரும் பேசும் பேசுபொருளாக மாறிய நிலையில்,
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவராக இருந்து வந்த பில்லா ஜெகனை நீக்கி தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட தலைவராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்து அறிவித்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். புதிய மாவட்ட தலைவர் எஸ்.ஜே.சுமன் பில்லா ஜெகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக வா, தவெக வா என தவித்து வந்த பில்லா ஜெகன், ஆளப்போற கட்சியா தவெக வருவது அப்புறம் இருக்கட்டும். தற்போது ஆளும் கட்சியிலேயே தொடர்வோம் என தனது ரூட்டை கிளியர் செய்த பில்லா ஜெகனுக்கு தெம்பூட்டும் விதமாக,
தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஜே.ஜெகன் அவர்கள், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு, கழகத் தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார். என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.