தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். பாஜக பிரமுகரான இவருக்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.74 சென்ட் நிலமும் இரண்டு கடைகளும் உள்ளன. இந்நிலையில் மாரியப்பன் வேலுமணி என்பவரிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவரது 2.74 சென்ட் இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இவரது பாஜக நண்பர்களான விருதுநகர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன், பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நல்லதம்பி மற்றும் ஆலம்பட்டியைச் சேர்ந்த அட்டை ராசு உள்ளிட்டோரிடம் மாரியப்பனுக்குச் சொந்தமான இடத்தை விற்பனை செய்து தருவதாகக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து தனது சக கட்சியினரை நம்பி மாரியப்பன் அவரது இடத்திற்கு உரிய ஆவணங்களை அவர்களிடம் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாரியப்பனின் இடத்தை விற்பதற்காக, பாலசுப்பிரமணியன், நல்லதம்பி, அட்டை ராசு ஆகியோர் கயத்தாறை சேர்ந்த பாஜக வணிகர் பிரிவு மாநில செயலாளரும் ஸ்ரீ பீமா கோல்ட் நிதி நிறுவன உரிமையாளருமான அசோக் குமார் என்பவரிடம் 1 சென்ட்-க்கு ரூ.61 லட்சம் என கிரயம் பேசி மொத்த இடத்திற்கும் ஒரு கோடியே 67 லட்சத்து 77 ஆயிரம் என ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதையடுத்து மாரியப்பன் தனது இடத்தை கிரையம் செய்து கொடுத்த நிலையில், தனக்கு சேர வேண்டிய ஒரு கோடியை 67 லட்சத்தை அசோக்குமார் மற்றும் பாஜக நண்பர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் “பணத்தை தர முடியாது. நீ எங்கே போய் சொன்னாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்” என அவரை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இது தொடர்பாக கோவில்பட்டி காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், மாரியப்பன் தனது மனைவியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தன்னை ஏமாற்றிய பாஜக பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தருமாறு மனு கொடுத்துள்ளார். இந்த மோசடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.