தூத்துக்குடியில் லாரி செட்டில் தொழிலாளியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த வழக்கில் லாரி செட் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் வசந்த் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் மகன் பிரேம்குமார் (49). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து தூத்துக்குடி 3வது மைல் மேபாலம் அருகே உள்ள தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த சோலையப்பன் மகன் தில்லை சிதம்பரம் (60) என்பவருக்கு சொந்தமான லாரி செட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அடிக்கடி இவர் குடிபோதையில் இருப்பதால் அவரை அந்த லாரி செட் உரிமையாளர் தில்லை சிதம்பரம் வேலையை விட்டு நீக்கி விட்டாராம். இதனால் நேற்று மாலை குடிபோதையில் வந்த பிரேம்குமார், தில்லை சிதம்பரத்திடம் தகராறு செய்தாராம். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தில்லை சிதம்பரம் லாரி செட்டில் கிடந்த சுத்தியலால் பிரேம்குமார் தலையில் தாக்கினாராம்.
இதில் பலத்த காயம் அடைந்த பிரேம் குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 5 மணி அளவில் அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் கொலை வழக்கு பதிவு செய்து, தில்லை சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.