தூத்துக்குடியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கையில் அரிவாளுடன் வீடியோ எடுத்து அதை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து பரப்பி மிரட்டியவரை போலீசார் கைது செய்தனைர்.
தூத்துக்குடி ஆரோக்கியபுரம், சுடலையாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் ஆதவன் (27) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுடலையாபுரம் பகுதியில் அரிவாளை வைத்து மிரட்டும் வகையில், அதன் பின்னணியில் சினிமா பாடலை ஒலிக்க வைத்து வீடியோ எடுத்து அதனை தனது செல்போனில் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வைத்து பரப்புவதாகவும், மேலும் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் , தூத்துக்குடி உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திராவிற்கு சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஆதாம் அலி தலைமையில் உதவி ஆய்வாளர் முனியசாமி மற்றும் போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆதவனை கைது செய்து அவரிடமிருந்த அரிவாள் மற்றும் செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதுபோன்று சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஜாதி மோதலை தூண்டும் வகையில் வாட்ஸ்ஆப்பில் பரப்பிய ஒருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யபபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ, ஜாதி, மத மோதலை தூண்டும் வகையிலோ, கையில் ஆயுதங்களுடன் அச்சுறுத்தும் வகையிலோ அல்லது சட்டத்திற்கு புறம்பான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்கள் மற்றும் வாகனங்களில் வீலிங் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.