ஓட்டப்பிடாரம் அருகே பெண்ணிடம் நகையை பறிக்க முயன்றவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சோ்ந்த தம்பதி பாலாமணி (44) - மைதிலி (40). இவா்கள் 2020ஆம் ஆண்டு பிப். 6ஆம் தேதி ஓட்டப்பிடாரத்திலிருந்து தங்களது ஊருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா். அப்போது புளியம்பட்டி அருகே, மைதிலி அணிந்திருந்த சங்கிலியை மா்ம நபா் பறிக்க முயன்றாராம்.
சுதாரித்துக்கொண்ட மைதிலி சங்கிலியை இறுகப் பிடித்துக் கொண்டதால், அந்த நபா் தப்பியோடி விட்டாராம். இதனையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நாரைக்கிணறு போலீசார் வழக்குப் பதிந்து, ஓட்டப்பிடாரம் அருகே கோபாலபுரத்தைச் சோ்ந்த சண்முகவேல் மகன் தா்மா் என்ற பாலசுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை மாவட்ட உரிமையியல் - குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜெயந்தி விசாரித்து, பாலசுப்பிரமணியனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் முருகேசன் ஆஜரானார்.