தூத்துக்குடியில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து, 1 கிலோ 400 கிராம் கஞ்சா 6 செல்போன்கள், ரொக்கபணம் ரூபாய் 8000 மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு மேற்பார்வையில் தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சாந்தி மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று (29.01.2024) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காரில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் தூத்துக்குடி கதிர்வேல்நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் மணிகண்டன் (33) என்பதும் அவர் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி தனிப்படை போலீசார் மணிகண்டனை கைது செய்து அவரிடமிருந்த 1 கிலோ 400 கிராம் கஞ்சா, 6 செல்போன்கள், ரொக்க பணம் ரூபாய் 8000/- மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது ஏற்கனவே தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும், வடபாகம் காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்கும், மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கும் என 4 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.