தூத்துக்குடியில் இளைஞரை ஆயுதங்களால் தாக்கி செல்போன் பறித்து சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அழகு பாண்டியன் மகன் சந்தனகுமார் (25), இவர் தூத்துக்குடி புதிய துறைமுகம் பாரதி நகரில் தங்கி துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இவர் திண்டுக்கல்லில் இருந்து தூத்துக்குடிக்கு இரவு ஒரு மணிக்கு வந்துள்ளார்.
பழைய பஸ் நிலையம் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்த அவரை 2 மோட்டார் பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கத்தி மற்றும் அரிவாளால் தாக்கி அவரிடமிருந்து ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் தாளமுத்து நகர் கணபதி நகரை சேர்ந்த குமார் மகன் ராஜ்குமார் என்ற காட்டுவாசி (24), முத்துக்குமார் மகன் கோபாலகிருஷ்ணன் (22), தாளமுத்து நகரை சேர்ந்த நிர்மல் குமார் மகன் மணிகண்டன் (22), குணசேகரன் மகன் இசக்கி ராஜா (20), துரைசிங் நகரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சூர்யா (19) மற்றும் 17 வயது சிறார் ஆகிய 6 பேரையும் கைது செய்து 2 பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.