• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் இருந்து சென்ற கார் விபத்து : பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது

  • Share on

பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் பலியான நிலையில் இன்று மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி அருகே 3 வது மைல் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மரிய செல்வராஜ் ( 37 ) இவரது மனைவி பாத்திமா மேரி ( 31 ) இவர்கள் மகன் சந்தோஷ் செல்வம் ( 7 ). வேளாங்கண்ணியில் வேண்டுதல் நிறைவேற்றுவது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன்  டவேரா காரில் புறப்பட்டனர்.


அவர்களுடன் பாக்கியராஜ் ( 62 )  சண்முகத்தாய் ( 53 ), சரஸ்வதி ( 50 ), கணபதி ( 52 ), லதா ( 40 ), ராணி ( 40 ), ஞானம்மாள் ( 60 )  ஆகியோரும் சென்றனர். சின்னபாண்டி ( 40 ) காரை ஓட்டினார்.

இந்தநிலையில், நேற்று அதிகாலை தஞ்சாவூர் மாவட்டம், மனோரா பகுதியில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.  இந்த விபத்தில் ராணி, ஞானம்மாள், பாக்கியராஜ் மற்றும் டிரைவர் சின்னப்பாண்டி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.  காரில் பயணம் செய்த மீதமுள்ள 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதனை அடுத்து, விபத்தில் சிக்கியவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் காவல்துறையினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இது குறித்து சேதுபாவா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கணபதி ( 52 ) என்ற பெண் இன்று உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த சோகத்தில் இருந்து குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோர் மீளாத  நிலையில், மீண்டும் இன்னொருவர் உயிரிழந்த சம்பவம் இந்திரா நகர் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

  • Share on

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியில்லையா? கனிமொழி எம்பி பதில்

தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்ற மூதாட்டி மீது பைக் மோதி விபத்து - மூதாட்டி பலி

  • Share on