தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் 'மக்களுடன் முதல்வர்' எனும் புதிய திட்டத்தை துவக்கியுள்ளார். இந்தத் திட்டத்தின் படி மக்கள் அதிகமாக அணுகும் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மின்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை உட்பட அத்தியாவசிய துறைகளின் அதிகாரிகள், ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு முகாம்கள் நடக்கும்.
மழை வெள்ள பாதிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த முகாம் நடக்கவில்லை. தற்போது நிலைமை சீரடைந்து விட்டதால், இந்த முகாம் இன்று நடக்கிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 22, 26, 27, 28, 39 ஆகிய வார்டு பகுதிகளுக்கு, தூத்துக்குடி சத்திரம் தெரு மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் இன்று ( 19ஆம் தேதி ) நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியின் 4, 11, 12, 13, 14, 20, 21, ஆகிய வார்டுகளுக்கு கந்தசாமிபுரம் ஆர்.சி.பெத்தானி நடுநிலைப் பள்ளியிலும், 34, 35, 51, ஆகிய வார்டுகளுக்கு மில்லர்புரம் செயின்ட் மேரீஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், 51 வது வார்டுக்கு உட்பட்ட காதர்மீரான்நகர், ஊரணி ஒத்தவீடு, முடுக்கு காடு, வீர நாயக்கன் தட்டு மற்றும் 60வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தெர்மல்நகர் கேம்ப் 1ல் அமைந்துள்ள மாநகராட்சி துவக்க பள்ளியிலும் இன்று நடைபெறும் முகாம்களை அமைச்சர் கீதாஜீவன், ஆட்சியர் லட்சுமிபதி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.