கோவில்பட்டி ராஜீவ்நகரை சேர்ந்த மாரியப்பசாமி மனைவி ரேகா என்பவரது செல்போனில் டெலிகிராம் செயலியில் பகுதி நேர வேலைவாய்ப்பு சம்மந்தமாக செய்தி வந்ததாகவும், அதன் மூலம் அடையாளம் தெரியாத நபருடன் தொடர்பு கெண்டு இணையதளத்தில் Product Rating கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியதை நம்பி தனது வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 14,12,849/- பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி ரேகா அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதேபோன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த செலஸ்டன் மகன் பனிமய கிளாட்வின் மனோஜ் என்பவரை அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து வெளிநாட்டில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மருந்து ஏற்றுமதி செய்யும்மாறு கூறியதை நம்பி ரூபாய் 36,98,800/- பணத்தை தனது வங்கி கணக்கிலிருந்து அனுப்பி ஏமாற்றப்பட்டதாக மேற்படி பனிமய கிளாட்வின் மனோஜ் அளித்த புகாரின்பேரில் தூத்துக்கு சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தூத்துக்குடி ரஹமத்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த முகமது அப்துல் காபர் என்பவரிடம் அடையாளம் தெரியாத நபர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ரூபாய் 1 லட்சம் பணத்தை மேற்படி முகமது அப்துல் காபர் தனது வங்கி கணக்கிலிருந்து கொடுத்து ஏமாற்றப்பட்டதாக முகமது அப்துல் காபர் அளித்த புகாரின்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேற்படி சைபர் குற்ற சம்பவங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான சைபர் குற்ற பிரிவு போலீசார் தொழில்நுட்பரீதியாக விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட வங்கிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றம் மூலம் மோசடி செய்யப்பட்ட மொத்தம் ரூபாய் 13,36,530/- பணம் திரும்ப பெறப்பட்டு மீட்கப்பட்டது.
மேற்படி மீட்கப்பட்ட ரூபாய் 13,36,530/- பணத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மாவட்ட காவல்துறை கூட்ட அரங்கில் வைத்து மேற்படி பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில்,
செல்போன்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக கையாளவேண்டும், மேலும் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் பெற்றோர்களின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும், செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடுவது முற்றிலும் தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களை பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முகம் தெரியாத நபர்களிடம் பழகி பின்னர் குற்ற நிழ்வுகள் நடக்க வழிவகை செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் செல்போனுக்கு வரும் OTPயை கொடுக்க வேண்டாம், வங்கி ஒருபோதும் உங்கள் OTPயை கேட்காது. உங்களுக்கு வரும் OTPயை யாரிடமும் பகிராதீர்கள், அதன் மூலம் உங்கள் பணம் ஏமாற்றப்பட்டு மோசடி நடைபெறும், சமூக வலைதளங்களில் வரும் வேலை வாய்ப்பு சம்மந்தமான செய்திகளை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். ஆன்லைனில் டிரேடிங் கம்பெனி மூலம் அதிக லாபம் பெறலாம் என்றும், ஆன்லைனில் முதலீடு செய்து அதிக வட்டி மூலம் அதிக பணம் பெறலாம் என்றும் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். அதேபோன்று தனியார் ஹோட்டல்கள், நிறுவனங்களுக்கு அதிக ரேட்டிங் கொடுத்து அதற்கு பதிலாக அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி லிங்க்குகளை கிளிக் செய்வதன் மூலம் நமது பணம் மோசடி செய்யப்படும் என்றும்,
மேலும் OTP மூலம் மோசடியாக பணம் எடுக்கப்பட்டாலோ அல்லது போலியான செயலிகளை தரவிறக்கம் செய்து உங்கள் தகவல்கள் திருடப்பட்டாலோ, வேறு வகையிலோ பண இழப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் 24 மணி நேரத்தில் சைபர் குற்ற பிரிவு அறிவித்துள்ள இலவச தொலைபேசி எண்ணான 1930ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் தொடர்பாக https://cybercrime.gov.in/ என்ற இணையதள முகவரியில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் பேரில் 28 வழக்குகளில் நடடிவக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 46 லட்சம் பணம் நீதிமன்றம் மூலமாக முடக்கம் (Freeze) செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற சைபர் குற்றங்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன், காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர்கள் அச்சுதன், சுதாகரன் உட்பட சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.