ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரை பணயம் வைத்து விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. திரைப்பட இயக்குநர் அமீர் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல முக்கிய நகரங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் மூன்று நாட்கள் ஜல்லிக்கட்டு போட்கள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் பங்கேற்று அதிக காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசளிக்கப்பட்டது. இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்த வீரர்களுக்கு பைக் பரிசளிக்கப்பட்டது. இதனிடையே பரிசு வென்ற வீரர்கள், தங்களுக்கு கார் பரிசளிப்பதை விட அரசு வேலை தரலாம் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனிடையே இதே கோரிக்கையை அரசியல் தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில், மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஆகியோரது கனிவான கவனத்திற்கு.. வணக்கம்.
திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, "கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்" என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,
"தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத்
தெரிபு தெரிபு குத்தின ஏறு..
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும்
புல்லாளே ஆய மகள்.."
என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.
மேலும், இன்று மதுரை அலங்காநல்லூரிலும், கடந்த இரு தினங்களாக அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிளும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.
"தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!" என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன் என்று இயக்குநர் அமீர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.