தென் தமிழகத்தில் உள்ள துறைமுக நகரமான தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையை அமைப்பதற்கான இறுதிக் கட்ட பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
சென்னையில் நடந்த மாபெரும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடிக்கு அதிகப்படியான முதலீடுகள் குவிந்த நிலையில், தற்போது தூத்துக்குடிக்கு மற்றொரு மெகா ஒப்பந்தத்தைப் பெற உள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாகச் சுமார் 9 பில்லியன் டாலர்கள் முதலீடு குவிய உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தைத் தலைமையாகக் கொண்டு பல துறையில் வர்த்தகம் செய்யும் சக்தி குரூப் ஆப் கம்பெனிஸ் மூலம் இந்த மாபெரும் முதலீட்டுத் திட்டம் வெற்றி அடையப் போகிறது. சக்தி குரூப் ஆப் கம்பெனி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் லாமண்ட் (Lamant) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்குக் கத்தார் அமைப்பின் மூலம் FDI முதலீடு பெறப்பட உள்ளது.
இரு நிறுவனங்கள் தரப்பில் 9 பில்லியன் டாலர்களுக்கான கொள்கை ரீதியான ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது கூட்டணியில் பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து ஆய்வு செய்யப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக, 90 வருடமாகப் பல துறையில் இயங்கி வரும் சக்தி குருப்-ன் இயக்குனர் டி ராஜ்குமார் ஒரு பத்திரிக்கைக்குத் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் பிப்ரவரி இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டில், குவைத் நாட்டின் Al-Mutawa & Sons Co அமைப்பின் கிளை நிறுவனமான Southern Pearl Refinery and Petrochemicals (SPRPPL) மற்றும் இங்கிலாந்து Lamant நிறுவனத்துடன் உடன் கைகோர்த்துத் தூத்துக்குடியில் முதல் கட்டத்தில் சுத்திகரிப்பு நிலையத்தையும், இரண்டாம் கட்டத்தில் பெட்ரோ கெமிக்கலை ஆலையை நிறுவ திட்டமிட்டது.
ஆனால் கோவிட்-19 மற்றும் பிற வணிக இடையூறுகள் காரணமாக இந்த ஒப்பந்தம் வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் SPRPPL வாரியத்தின் இயக்குனரான ராஜ்குமார், பெட்ரோகெமிக்கல் மையமாக மாற்ற இந்த வணிகத் திட்டம் மாற்றப்பட்டது எனக் கூறியுள்ளார்.
9 பில்லியன் டாலர் அதாவது 75000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த முதலீட்டு திட்டத்தின் மூலம் நேரடியாக 10000 பேருக்கும், மறைமுகமாக 40000 பேர் வரையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மாபெரும் தொழிற்சாலை 2000 ஏக்கரில் அமைய உள்ளது. மேலும் இந்தத் திட்டம் 9 வருடத்தில் செய்யப்பட உள்ளது.
இந்த மாபெரும் திட்டம் 100 சதவீதம் அன்னிய முதலீட்டின் வாயிலாக நடக்க உள்ளது, கத்தார் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர் இந்த மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்தும் வேளையில், இத்தொழிற்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட உள்ள இங்கிலாந்து நாட்டின் Lamant நிறுவனத்திற்குச் சக்தி குரூப் லோக்கல் பார்ட்னராக இயங்க உள்ளது எனவும் டி ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்தியா பெட்ரோ கெமிக்கல் ஏற்றுமதியில் முன்னோடியாக இருக்கும் குஜராத் மாநிலத்திற்குப் போட்டியாகத் தமிழ்நாடு எடுத்துள்ள முக்கிய முயற்சி. தூத்துக்குடியில் அமைக்கப்படும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை குஜராத்தில் இருக்கும் ஹசிரா மற்றும் ஜாம்நகரில் இருக்கும் தொழிற்சாலைக்கு இணையாக இருக்கும் எனவும் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஏற்றுமதியின் பெரும் பங்கீடு பெட்ரோலியம் பொருட்களைச் சார்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாடு இத்துறையில் இல்லாமல் இருப்பது ஏற்றுமதியைச் சார்ந்து நகரும் தமிழ்நாட்டுப் பொருளாதாரத்திற்குப் பின்னடைவாக இருந்த நிலையில் இப்புதிய திட்டம் மூலம் இந்தக் குறை தீர உள்ளது.