• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையன் கைது!

  • Share on

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடையில் கைவரிசை காட்டிய வடமாநில கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 15-ந்தேதி நள்ளிரவில் மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து, அங்கிருந்த ரூ.7 ஆயிரம் மற்றும் 25 மதுபாட்டில்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் நள்ளிரவில் அப்பகுதியில் வடமாநில கும்பல் சந்தேகப்படும்படியாக நடமாடியது தெரிய வந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் இரவில் தூத்துக்குடி மத்தியபாகம் மோட்டார் சைக்கிள் ரோந்து போலீஸ்காரர், தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கும்பலாக நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களிடம் போலீஸ்காரர் விசாரித்தார்.

அப்போது அந்த கும்பல் இருளில் தப்பி ஓடியது. எனினும் அவர்களை விரட்டிச் சென்ற போலீஸ்காரர், வடமாநில கும்பலைச் சேர்ந்த ஒருவரை மடக்கி பிடித்தார். தொடர்ந்து மற்ற போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராய்சிங் (வயது 30) என்பதும், பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையில் கைவரிசை

கைதான ராய்சிங் உள்ளிட்ட வடமாநில கும்பலைச் சேர்ந்தவர்கள், தூத்துக்குடி 2-ம் கேட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து பணம், மதுபாட்டில்களை திருடினர். பின்னர் தூத்துக்குடி சிவன்கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளிலும் கொள்ளைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இந்த கும்பல், பின்னர் நெல்லை மாநகரிலும் கைவரிசை காட்ட திட்டமிட்டது. அதன்படி கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் நெல்லை பாலபாக்யாநகரில் உள்ள கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரோந்து வந்த நெல்லை மாநகர உதவி கமிஷனர் ராஜேஸ்வரன் தலைமையிலான போலீசார், வடமாநில கொள்ளை கும்பலை கையும் களவுமாக பிடிக்க முயன்றனர்.

உடனே சுதாரித்து கொண்ட கொள்ளையர்கள் இரும்பு கம்பியாலும், கல்லாலும் போலீசாரை தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதில் ஏட்டு சரவணபிரகாஷ், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் காயமடைந்தனர். தலைமறைவான வடமாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். 

அவர்கள் தப்பி சென்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர். இதில் ராய்சிங் உள்ளிட்டவர்களின் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் தப்பிச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் 4 பேர் சென்னையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் சென்னை விரைந்தனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை தேடி அலைகிறீர்களா? நாளை ரெடியா இருங்க... உங்களுக்கு தான் இந்த வாய்ப்பு!

தூத்துக்குடி-யில் மற்றொரு மெகா முதலீடு.. அடி தூள்!

  • Share on