ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு நேற்று மாலையில் பொங்கல் தின விளையாட்டு விழா நடைபெற்றது. போட்டிகளுக்கு ஓட்டப்பிடாரம் சிலோன் காலனி பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ( 30 ) என்பவர் நடுவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சி முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் கணவரான கருணாநிதி ( 50 ) என்பவர் பசுவந்தனனில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான முகேஷ் ( 26 ) இருவரும் பொங்கல் தின விளையாட்டு போட்டி நடைபெற்ற இடத்திற்குச் சென்று அங்கு நடுவராக இருந்த விக்னேஸ்வரன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வாக்குவாதம் முற்றவே முகேஷ் அங்கிருந்து செங்கலை எடுத்து விக்னேஷ்வரின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் கருணாநிதியும் அவரை கையால் தாக்கி கொலை மட்டல் விடுத்துள்ளாராம்.
இதில் பலத்த ரத்த காயம் அடைந்த விக்னேஸ்வரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கருணாநிதி, முகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.