தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள பீடி இலைகள், வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள், களைகொல்லி மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கடற்கரை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் கரைவலை கடற்கரைப் பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் , அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக சரக்கு லாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 2.7 டன் பீடி இலைகள், சுமாா் 57 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரி, இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்துவெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு இலங்கைக்கு பீடி இலைகளை கடத்தும் கும்பல், போலீசாரை கண்டதும் பைபர் படகை கடலுக்குள் தள்ளிவிட்டு தப்பியோடினராம்.
அதிலிருந்த தூத்துக்குடி பி. தளவாய்புரத்தை சோ்ந்த பாலகோகுல் (21), டி.சவேரியாா் புரத்தை சாா்ந்த ஸ்டீபன் என்ற அன்பு (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, அருகே லாரியில் இருந்த சுமாா் 2.7 டன் பீடி இலைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, 3 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடியில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.1 கோடி மதிப்பிலான பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.