தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை கடத்தி சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 7பேரை போலீசார் கைது செய்தனர். 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் மகன் சதீஷ்குமார் (36) என்பவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி சமீர் வியாஸ் நகரைச் சேர்ந்த சண்முககனி மகன் ஜெயக்குமார் (46) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 10.01.2024 அன்று இரவு சதீஷ்குமார் கோமஸ்புரம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது, ஜெயக்குமார், அவரது நண்பர்களான கீழ அரசரடி பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் சந்தனபாரதி (22), துப்பாஸ்பட்டி பகுதியை சேர்ந்த வேல்சாமி மகன் முருகன் (19), செல்வராஜ் மகன் ஆதிராஜா (20), ராமசாமி மகன் பேச்சிராஜா (23), முத்தையா மகன் வேல்சாமி (54) மற்றும் தாளமுத்துநகர் கொத்தனார் காலனியை சேர்ந்த முருகன் மகன் கார்மேகம் (25) ஆகியோருடன் கடத்திச் சென்று ஜெயக்குமாருக்கு சொந்தமான கீழ அரசரடி பகுதியில் உள்ள கருவாடு கடையில் அடைத்து வைத்து சதீஷ்குமாரை அரிவாள் மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து பின்பு அவரை கீழ அரசரடி பகுதியில் உள்ள சுங்கசாவடி அருகே விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, வடபாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு ஜெயக்குமார், சந்தனபாரதி, முருகன், ஆதிராஜா, பேச்சிராஜா, கார்மேகம் மற்றும் வேல்சாமி ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.