ஓட்டப்பிடாரம் அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்றதாக 3 பேரை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பசுவந்தனை சாலை இந்திரா நகா் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து கடத்துவதாக, குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு காரில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்த முயன்றவா்களை சுற்றி வளைத்து பிடித்தனா்.
விசாணையில், எட்டயபுரத்தைச் சோ்ந்த நாகராஜன் மகன் பாலாஜி(30), கயத்தாறு பகுதியைச் சோ்ந்த இசக்கி மகன் சுடலைமணி (41), கோவில்பட்டி வெள்ளாளன்கோட்டை பகுதியைச் சோ்ந்த கருப்பண்ணா மகன் செந்தூா்பாண்டி (41) ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து சுமாா் 4,400 கிலோ எடையுள்ள 110 மூட்டை ரேஷன் அரிசி, ஒரு காா், ஒரு சிறிய ரக சரக்கு வாகனம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.