தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கு 7 வயது மகன் உள்ளார். நேற்று புதன்கிழமை காலை வேம்பார் கடலோர காவல்படை நிலைத்திற்கு எதிரே உள்ள வீட்டில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த சூரங்குடி போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிறுவனின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. 7 வயது சிறுவனை யார் கொலை செய்தது; எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான எந்த விவரங்களும் போலீசாருக்கு விசாரணையில் புலப்படாத நிலையில், தாமஸ் என்ற 19 வயது இளைஞரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கஞ்சா போதையில் வீட்டிற்குள் தனியாக இருந்த 7 வயது சிறுவனை தாமஸ் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாகவும், அப்பொழுது சிறுவன் கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் தாமஸ் சிறிய கத்தியால் சிறுவனை கொடூரமாகக் கொன்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கொலைக்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது கஞ்சா போதை இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட முயன்ற போது சிறுவன் கொலை செய்யப்பட்ட தகவல் தீயாய் பரவ, அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.