• vilasalnews@gmail.com

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் சமந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியது ஏன்? - சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

  • Share on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கி அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஹென்றி திபேன், துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையமும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் பரிந்துரைத்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார்.

இன்றைய விசாரணையில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாமானதுதானா? இழப்பீடு வழங்க உத்தரவிட்டதுடன் தேசிய மனித உரிமை ஆணையத்தின் பணி முடிவடைந்து விடவில்லை. சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, இழப்பீட்டை அவர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். மனித உரிமை ஆணைய உத்தரவுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பதாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தரப்பையும் கேட்க வேண்டும் என்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய மனித உரிமை மீறலில் ஈடுபட்ட, அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்து மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

  • Share on

தற்காலிக ஓட்டுநரா... அலறும் மக்கள் - இப்படி ஆனா அலறத்தானே செய்வார்கள்!

வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்!

  • Share on