தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பிரதம மந்திரி பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் நடப்பு ராபி பருவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய கொத்தமல்லி பயிருக்கு 18.01.2024, நெல், சிவப்பு மிளகாய், வெங்காயம் பயிருக்கு 31.01.2024, வெண்டை பயிருக்கு 15.02.2024, வாழைப்பயிருக்கு 29.02.2024 என பயிர்காப்பீடு செய்ய கடைசி நாளாக அரசினால் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாழைப்பயிரை பொறுத்தவரையில் அக்டோபர் 2023 முதல் நடவு செய்யப்பட்டு பிப்ரவரி 2024 வரை நடவு செய்யப்பட உள்ள வாழைப்பயிர்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு செய்ய முடியும். அக்டோபர் 2023-க்கு முன்பு நடவு செய்யப்பட்ட வாழைப்பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாது. விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன் (Proposal Form) கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டணத்தை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும்.
நடப்பு பருவத்தில் விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.491, வாழைப் பயிருக்கு ரூ.3470, கொத்தமல்லி பயிருக்கு ரூ.416, சிவப்புமிளகாய் பயிருக்கு ரூ.910, வெண்டை பயிருக்கு ரூ.870, வெங்காயப் பயிருக்கு ரூ.1085 என அரசினால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் அனைவரும் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பயிர்காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்கள்.