தூத்துக்குடியில் பெய்த கனமழை வெள்ளத்தால் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மற்றும் அங்கு சேமித்து வைத்திருந்த இரத்த யூனிட்டுகள் முழுமையாக சேதமடைந்த விபரத்தை இரத்த வங்கி மருத்துவக்குழுவினர் தெரிவித்தவுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறை சார்பாக உடனடியாக சிறப்பு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மனிதநேயத்துடன் இன்று ஆயுதப்படை வளாகத்தில் இரத்த தானம் வழங்கினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை வெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி இரத்த வங்கியும், அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த இரத்த யூனிட்டுகளும் முழுமையாக சேதமடைந்த விபரத்தை மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி மருத்துவக்குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து தெரிவித்தனர். இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் சிறப்பு இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதையறிந்த 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மனிதநேயத்துடனும், தொண்டுள்ளத்துடனும் இரத்த தானம் வழங்கினர்.
இந்த சிறப்பு இரத்த தான முகாமை இன்று காலை துவக்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை காவல்துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மனிதநேயத்துடனும், தொண்டுள்ளத்துடனும் காப்பாற்றினார்கள். அதே போன்று அரசு மருத்துவக்கல்லூரி இரத்த வங்கியும், அங்கிருந்த இரத்த யூனிட்டுகளும் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விபரத்தை மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி மருத்துவக்குழுவினர் தெரிவித்ததையடுத்து மாவட்ட காவல்துறை சார்பாக இந்த இரத்ததான சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்து கொண்டு மனிதநேயத்துடன் இரத்ததானம் வழங்கிய நமது காவல்துறையினர் அனைவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். மேலும் இரத்ததானம் என்பது ஒரு உயிரை காப்பாற்றக்கூடிய செயலாகும். நாம் பிறருக்கு இரத்ததானம் அளிப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பது மட்டுமல்லாமல், இன்னொரு உயிரையும் காப்பாற்ற முடியும். மேலும் இயன்ற அளவில் ரத்த வங்கிக்கும், பொதுமக்களுக்கு இரத்த தானம் வழங்கி உதவிட காவல்துறை சார்பாக நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்றும், இரத்தம் தேவைப்படும் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை அலுவலக தொலைபேசி எண் 0461 2310351 என்ற எண்ணிற்கு அழைத்து உடனடியாக இரத்ததானம் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இந்த முகாம் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் சாந்தி மற்றும் மருத்துவர் அச்சுதானந்தம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனை முருகன் மற்றும் ஆயுதப்படை போலீசார் செய்திருந்தனர். மேலும் இந்த முகாமில் தாலுகா காவல்துறையினர், ஆயுதப்படையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் பேரூரணி பயிற்சி பள்ளி காவலர்கள் பலரும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்.