• vilasalnews@gmail.com

வியாதிகளை தரும் நீராக மாறிய மழை நீர்... இந்த நிலை என்று மாறுமோ என்ற ஏக்கத்தில் மக்கள்... இது தூத்துக்குடி மாநகராட்சியின் அவலநிலை!

  • Share on

தூத்துக்குடியில் பெய்த மழையால் தேங்கிய நீரானது கிட்டதட்ட  20 நாட்கள் ஆன நிலையிலும் வடியாமல் இருப்பதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டு, நோய் தொற்று ஏற்படும் நிலைக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17,18 ஆம் தேதி பெய்த வரலாறு காணாத மழை, மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளை புரட்டி போட்டு விட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கியதோடு, மிகப்பெரிய அளவில் சேதாரம் ஏற்பட்டு பொருளாதார அளவில் மிகப்பெரிய சிக்கலை சந்திக்கும் நிலை உருவானது. இதிலிருந்து மக்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.


இருந்த போதிலும், தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டுக்கு உட்பட்ட  ஜெ.ஜெ.நகர், எஸ்.எஸ்.நகர், திரு.வி.க நகர் ஆகிய பகுதிகளில்  கிட்டதட்ட  20 நாட்கள் ஆன நிலையிலும், தேங்கிய மழை நீரானது வடியாமலும், அப்புறப்படுத்தாமலும் உள்ளது. இதனால், அந்த நீரானது சாக்கடையாகவும், பாசி பிடித்து பச்சை நிறமாகவும் மாறி துர்நாற்றம் வீச தொடங்கியுள்ளது. இது போன்ற சூழலில் அங்கு வசிக்ககூடிய பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து, அப்பகுதி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தியிடம் கேட்ட போது,


"இந்த பகுதியில் நிலை குறித்து, மாநகராட்சி மேயர், ஆணையர், அதிகாரிகள் என அனைவரிடமும் எடுத்துக்கூறிய போதும், இதுவரை யாரும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நான் அதிமுக மாமன்ற உறுப்பினர் என்ற காரணத்தினால், வேண்டுமென்ற திமுகவைச் சேர்ந்த மேயர் ஜெகன் பெரியசாமி இவ்வாறு பாராமுகமாக செயல்படுகிறார். ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளும் அவருக்கு கட்டுப்பட்டே இருப்பதனால், யாரும் இப்பிரச்சனையை கண்டு கொள்ளவதில்லை" என மேயர் மீதும், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் மீதும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 


கட்சி பேதங்களை கடந்து, மக்களை பாதிப்பில் இருந்து மீட்க அதிகார மையங்கள் முன்வரவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Share on

தூத்துக்குடிக்கு இன்று கனமழை எச்சரிக்கை : பாதுகாப்பான இடத்திற்கு செல்ல மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் உத்தரவோடு மூடப்படும் 75 மதுக்கடைகள், பார்கள்... இதோ லிஸ்ட்!

  • Share on