வைப்பார் கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா வைப்பார் கிராமத்தில் ராஜ கம்பள மகாஜன சங்கம் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 265 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இன்று ( ஜன.,4 ) நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
முதலாவதாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 7 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டில் முதலாவது பரிசு தொகை 1,11,265 ரூபாயை, சாரதி அங்குச்சாமி, பின்சாரதி சதீஸ் ஓட்டிய சண்முகபும் மெடிக்கல் பி.விஜயகுமாருடைய காளைகளும், இரண்டாவது பரிசு தொகை 91,265 ரூபாயை சாரதி செல்வராஜ், பின்சாரதி பாலா ஓட்டிய சண்முகபும் மெடிக்கல் பி.விஜயகுமாருடைய காளைகளும்
மூன்றாவது பரிசு தொகை 71,265 ரூபாயை வேலங்குளம் எம்.கண்ணனுடைய காளைகளும், நான்காவது பரிசு தொகை 21,265 ரூபாயை அனியாபுரம் எஸ்கேஆர் மோகன்சாமிகுமாருடைய காளைகளும் தட்டிச்சென்றன.
இரண்டாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 14 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசு தொகை 51,265 ரூபாயை சண்முகபும் மெடிக்கல் பி.விஜயகுமாருடைய காளைகளும், இரண்டாவது பரிசு தொகை 41,265 ரூபாயை வேலங்குளம் எம்.கண்ணனுடைய காளைகளும்,
மூன்றாவது பரிசு தொகை 31,265 ரூபாயை கே.துரைச்சாமிபுரம் அய்யங்கார் பேக்கரி ஆர்எஸ் சுரேஷ் குமார் காளைகளும், நான்காவது பரிசு தொகை 11, 265 ரூபாயை சண்முகபும் மெடிக்கல் பி.விஜயகுமாருடைய காளைகளும் தட்டிச்சென்றது.
மூன்றாவதாக நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசு தொகை 20,265 ரூபாயை கம்பத்துப்பட்டி ஆர்.தினேஷ்பாண்டி காளைகளும், இரண்டாவது பரிசு தொகை 15,265 ரூபாயை கே.துரைச்சாமிபுரம் அய்யங்கார் பேக்கரி ஆர்எஸ் சுரேஷ் குமார் காளைகளும்,
மூன்றாவது பரிசு 10,265 ரூபாயை கே.வேப்பங்குளம் நல்லம்மாள் நினைவாக நல்லுச்சாமி காளைகளும், நான்காவது பரிசு தொகை 5,265 ரூபாயை வைப்பார் ராம் காளைகளும் தட்டிச்சென்றது.
இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாத புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட ஜோடி காளைகள் கலந்து கொண்டன. சாலைகளில் இருபுறமும் நின்று ரசிகர்கள், பொதுமக்கள் பலர் ஆரவாரத்தோடு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.