தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் புதிதாக நிறுவப்பட்ட 40 சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பேருந்து நிலையம் உட்பட விளாத்திகுளம் பகுதியின் முக்கிய இடங்களில் விளாத்திகுளம் வியாபாரிகள் சங்கம், வணிகர் சங்கம் மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட பொதுமக்கள் சார்பில் புதிதாக 40 சி.சி.டி.வி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.
புதிதாக நிறுவப்பட்ட இந்த சி.சி.டி.வி கேமராக்களை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று (18.01.2021) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் இது போன்று விளாத்திகுளம் பகுதியின் பல இடங்களில் புதிய சி.சி.டி.வி கேமராக்களை நிறுவ தனது பங்காக ரூபாய் 10,000/- பணத்தை விளாத்திகுளம் வர்த்தக சங்கத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், வட்டாட்சியர் ரகுபதி, தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் தனசிங், தூத்துக்குடி வடக்கு வணிகர் சங்க பேரமைப்பு மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் தூத்துக்குடி வடக்கு வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் பன்னீர் செல்வம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் மற்றும் தாழையுத்து காவல் ஆய்வாளர் (முன்னாள் விளாத்திகுளம் காவல் ஆய்வாளர்) பத்மநாபபிள்ளை உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடன் இருந்தனர்.