• vilasalnews@gmail.com

பார்த்து கொடுங்கய்யா - நிவாரணம் இல்லை என்றால் வாழ்வாதரம் இல்லை - மாவட்ட ஆட்சியர் கையை பிடித்து கேட்ட விவசாய மூதாட்டியின் பரிதாபம்

  • Share on

பார்த்து கொடுங்கய்யா, நிவாரணம் இல்லை என்றால் வாழ்வாதரம் இல்லை என மாவட்ட ஆட்சியரின் கையை பிடித்து கேட்ட விவசாய  மூதாட்டியின் பரிதாப நிலை, அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அறுவடைக்கு தயராக இருந்த பல்வேறு பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இது குறித்த கணக்கெடுப்பு பணிகளை அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கோவில்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் சேதமடைந்த பயிர்களை நிலத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இடைச்செவல் கிராம மக்கள் சேதமடைந்த பயிர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்ஜிடம் காண்பித்து தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த மூதாட்டி ஒருவர் பார்த்து கொடுங்கய்யா - நிவாரணம் இல்லை என்றால் வாழ்வாதரம் இல்லை என்று மாவட்ட ஆட்சியரின் கையை பிடித்து கேட்டது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. இதனை தொடர்ந்து,

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில் :

தூத்துக்குடி மாவட்டத்தினை பொறுத்தவரை மாவட்டத்தின் வடக்கு பகுதிகளான கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம் தாலூகா மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் அதிகளவில் மானவாரி விவசாயிகள் உள்ளனர்.

இதில் உளுந்து, பாசி, சோளம், கம்பு, மக்காச்சோளம், வெங்காயம், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர். வழக்கமாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பயிரிட்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் அறுவடை செய்வது வழக்கம். அறுவடை செய்யும் நேரத்தில் அதிகளவு மழை பெய்த காரணத்தினால் நிறைய பயிர்கள் சேதமடைந்துள்ளன.

சேதம் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு செய்து வருகிறோம். தூத்துக்குடி மாவட்டத்தில் 1லட்சம் 50 ஆயிரம் ஹெக்டர் மானாவரி நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் 60ஆயிரம் ஹெக்டர் உளுந்து உள்ளது. 40 ஆயிரம் ஹெக்டர் மக்காச்சோளம், 20 ஆயிரம் ஹெக்டேர் பாசி ஆகியவை உள்ளன.

என்னென்ன மாதிரி பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என்பது பற்றி இன்று கணக்கீடு செய்துள்ளோம். கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெறும் என்றும், வருவாய் துறை, புள்ளியியல் துறை மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் கண்கெடுப்பு செய்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கு தகுந்த இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்.

நிலம்  குத்தகை எடுத்து விவசாயம் செய்பவர்கள் குறித்து கணக்கெடுப்பின் குறிப்பிட வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே நிலத்தினை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களுக்கும் உரிய இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை கிடைக்கும் என்றார்.

முன்னதாக, எட்டயபுரம், விளாத்திகுளம் தாலூகாவில் பாதிக்கப்பட்ட பயிர்களையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. சின்னப்பன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் மொகைதீன், மாவட்ட ஆட்சித்தலைவர் நேர்முக உதவியாளர் (வேளாணமை) பாலசுப்பிரமணியம் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஐயா, கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

  • Share on

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் கல்வி உதவித்தொகை : எர்ணாவூர் நாராயணன் வழங்கினார்

விளாத்திகுளத்தில் புதிதாக நிறுவப்பட்ட 40 சி.சி.டி.வி கேமரா : எஸ்பி., ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

  • Share on